பல வருட போராட்டத்திற்கு பின் பிறந்த குழந்தை… இறந்த பரிதாபம்

பிரித்தானியாவில் நான்கு வருட போராட்டத்திற்கு பின் பிறந்த குழந்தை, 14 நாட்கள் கழித்து பரிதாபமாக இறந்துள்ளது குறித்து அதனுடைய பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த ரியா கான்ஸ்டபிள் மற்றும் அவருடைய காதலன் ஆரோன் மார்க்ஸ் ஆகியோர் குழந்தை இல்லாமல் 4 வருடம் கடுமையாக போராடியுள்ளனர்.

அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கடந்த ஆண்டு ரியா கர்பமடைந்திருக்கிறார். இதனை தம்பதியினர் இருவருமே மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.

விரைவில் தன்னுடைய குழந்தையை பார்க்க வேண்டும் என தம்பதியினர் ஆர்வமுடன் தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர் . அப்பொழுது குழந்தை நன்றாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

20 வாரம் கழித்து மீண்டும் சோதனை மேற்கொண்டபோது குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருப்பதாகவே மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் தொடரவில்லை. குழந்தை பிறப்பதற்கு முன் கடைசியாக மேற்கொண்ட சோதனையின் போது அவர்களின் மகன் மிகவும் அரிதான நிலையில் பிறக்கப் போகிறான் என்பதைக் கண்டுபிடித்தனர்.

குழந்தைக்கு ஹைப்போபிளாஸ்டிக் இடது இதய நோய்க்குறி (எச்.எல்.எச்.எஸ்) – இதயம் வழியாக சாதாரண இரத்த ஓட்டத்தை பாதிக்கும் பிறப்பு குறைபாடு மற்றும் இதயத்தின் இரண்டு சிறிய அறைகளுக்கு இடையில் ஒரு துளை என இரண்டு நோய்களை கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டதும் தம்பதியினருக்கு உலகமே தலைகீழாக மாறியிருக்கிறது. ஒருவழியாக ஆகஸ்டு 1-ம் திகதியன்று குழந்தை பிறந்தது. உடனடியாக மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவைசிகிச்சை வெற்றிகரமாக இருந்தபோதிலும், ஆறு நாட்களுக்குப் பிறகு, குழந்தை லியோவின் நிலை எதிர்பார்த்ததை விட அசாதாரணமானது என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். மேலும் பிறவி நுரையீரல் நிணநீர்க்குழாய் எனப்படும் நுரையீரல் நிலை இருப்பதாக நம்பினர்.

ஆகஸ்டு 14ம் திகதியன்று மருத்துவர்கள் போராடியும் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தையின் இறுதிச்சடங்கு செப்டம்பர் 2 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் 1.15 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.