இங்கிலாந்து அணியில் இருந்து தூக்கியெறியப்பட்ட மூத்த வீரர்…!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் தொடர் 1 க்கு 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்பிடித்திருந்தார். ஆனால் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார். இதனால் 2-வது மற்றும் 3-வது போட்டியில் களமிறங்கவில்லை.

இதற்கிடையே செப்டம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்க இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாட ஆண்டர்சன் தயாராகி வந்தார். 4-வது போட்டியில் விளையாட வேண்டுமென்றால் அவர் உடற்தகுதியை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தார். இதனையடுத்து அவர் வழக்கமாக விளையாடும் லங்காஷைர் கிரிக்கெட் கவுன்ட்டி அணியின் 2-ம் தர அணிக்காக களம் இறங்கி விளையாடினார்.

நான்காவது போட்டியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் நான்காவது போட்டிக்கான அணியில் ஆண்டெர்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. அணியில் புதியதாக கிரேக் ஓவர்டன் இணைக்கப்பட்டுள்ளார். கடுமையாக முயற்சித்த ஆண்டர்சன் அணியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளார்.

ஐந்தாவது போட்டிக்கும் அவர் தேர்வு செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிகம் எதிர்பார்த்த ஆஷஸ் தொடர் முழுவதும் விளையாட முடியாமலே ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இங்கிலாந்தின் 4 வது ஆஷஸ் டெஸ்ட் அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், ஜோ டென்லி, ஜாக் லீச், கிரேக் ஓவர்டன், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.