சிறையில் கதறித்துடித்து உதவிக்கு யாருமின்றி குழந்தை பெற்ற இளம்பெண்!

சிறையில் கதறித்துடித்து உதவிக்கு யாருமின்றி குழந்தை பெற்ற இளம்பெண்: ஒரு அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்க சிறை ஒன்றில் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக கூறியும் யாரும் உதவிக்கு வராததால், கத்திக் கதறி தானே தனியாக இளம்பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாள திருட்டு தொடர்பான வழக்கில் Denver சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார் Diana Sanchez (26).

நிறைமாத கர்ப்பிணியான Dianaவுக்கு அதிகாலை 5 மணிக்கே பிரசவ வலி ஏற்பட, சிறையறை வாசலில் காவலுக்கு நின்ற ஒரு காவலரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த இரக்கமற்ற பெண் அதிகாரி அதை கண்டுகொள்ளாமல் போக, ஆறு மணி நேரம் பிரசவ வலியால் துடித்தபின், காலை 10.44க்கு கதறித் துடித்து, எந்த மருத்துவ உதவியுமின்றி, தானே ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருக்கிறார் Diana

தங்கள் மனைவிகள் குழந்தை பெறும்போது, தாங்களும் பிரசவ அறையில் மனைவியின் பக்கத்திலேயே அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு நாகரீகத்தில் முன்னேறிய அமெரிக்காவில், ஒரு பெண், அவள் கைதியாகவே இருந்தாலும், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாத முறையில், தனியாக பிள்ளை பெற்றெடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்னும் செய்தி ஜீரணிக்க முடியாததாகவே உள்ளது.

அதுவும் வலிக்க வலிக்க குழந்தை பெற்றெடுத்த, அல்லது பெறப்போகும் பெண்கள்தான் அந்த சிறையில் காவலர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது அவமானத்திற்குரிய ஒரு விடயம்