ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியை அமைத்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமான விடயத்தில் எந்த வகையிலும் மாற்றங்களை செய்ய போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்படத்தில் நடைபெறும் தேசிய மாணிக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை இன்று திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மகிந்த இதனை கூறியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தினாலும் அந்த தீர்மானத்திற்கு எந்த மாற்றமும் இருக்காது.ஒரு தீர்மானத்தை எடுத்தால், அந்த தீர்மானத்துடன் இருக்க வேண்டும் என்பதால், நான் தெரிவு செய்யும் எவரையும் மாற்ற தயாரில்லை.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பேச்சுவார்த்தை நடத்துவது இணைவதற்காக அல்ல. இரண்டு கட்சிகளின் அடையாளங்களை பாதுகாத்து ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற தேவை எமக்கு உள்ளது. அதனை விடுத்து கட்சியில் இணையும் நடவடிக்கைகள் எதுவுமில்லை.எது எப்படி இருந்த போதிலும், நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடக்கும் பேச்சுவார்த்தையும், அவர்கள் கோத்தபாய ராஜபக்சவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையும் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது.அரசாங்கம் ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சவுக்கு பயந்துள்ளது. இதன் காரணமாக எம்மை தாக்குகின்றனர். எப்படி இருந்தாலும் நாங்கள் சரியான நேரத்தில் வேட்பாளரை அறிவித்தோம்.எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், அவர்களால் ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிக்க முடியவில்லை. கட்சியின் யாப்பை காரணம் காட்டி நெருக்கடியை மூடிமறை அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.அரசியல் கட்சிகளின் யாப்புகள் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமாயின் மிகவும் நல்லது எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.