திரைப்படங்களில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் காதலிப்பது போன்று காட்சிகள் வருவதால், மாணவிகள் பாதிக்கிறார்கள் என்று பகிரங்கமாக தெரிவித்திருந்த நிலையில் இயக்குனர்கள் அதை ஏற்று அந்த மாதிரியான காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்று திரிஷா கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிப் பருவ காதலையும் கல்லூரி கால காதலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட 96 என்ற படத்தில் நடித்ததால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை திரிஷா.
இந்த நிலையில் சென்னை எண்ணூர், சுனாமி குடியிருப்பு பகுதியில், குழந்தை திருமணத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் யுனிசெப் விளம்பர தூதுவரான திரிஷா பங்கேற்றார். அவர் முன்பு பேசிய கல்லூரி மாணவி ஒருவர் பள்ளி மாணவிகள் காதலிப்பது போல சினிமாவில் காட்சிகள் வைக்கப்படுவதால் அதை பார்த்து குழந்தை திருமணம் பெருகுவதாக குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்ல முடியாமல் தவித்த நடிகை திரிஷா, பள்ளி பருவ காதல் காட்சிகள் கொண்ட படங்கள் எடுக்கும் சினிமா இயக்குனர்களுக்கு சமூக அக்கறை வேண்டும் என்று ஒப்புக் கொண்டதோடு, செய்தியாளர் சந்திப்பையும் பாதியிலேயே முடித்து விட்டு வெளியேறினார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இதே யுனிசெப் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷா , திரைப்படங்கள் மாணவர்களின் மனதை பாதிக்காது என்பது போல கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதெற்கெல்லாம் மேலாக கடந்த காலங்களில் திரிஷாவே பள்ளி சீருடையுடன், ஜி உள்ளிட்ட சில படங்களில் நாயகன் மீது கடைகண் பார்வை வீசும் காதல் மாணவியாக நடித்துள்ளார்.
70 படங்களில் நடித்து முடித்த பின்னராவது, பள்ளி பருவத்தில் மாணவர்கள் காதலிப்பது போல படம் எடுத்தால் அது அவர்களின் மனதை பாதிக்கும் என்று புத்திக்கு எட்டி இருப்பது வரவேற்க தகுந்தது