யாழில் திருமணமான அன்றே பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் திருமணம் நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகை நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நவாலி கொத்துக்கட்டி பகுதியில் நடைபெற்ற திருமண காணொளியுடன் வந்த கொள்ளையர்கள் அதில் அணிந்திருந்த நகைகளை தருமாறு மிரட்டியுள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி மணமகளின் தாலி உட்பட பெண்கள் அணிந்திருந்த நகைகள் ஒவ்வொன்றாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் ஒருவரை கட்டிவைத்துவிட்டு வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வின் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்துள்ளனர். வீடியோவில் பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகளை தருமாறு கத்தி முனையில் மிரட்டியுள்ளனர்.

கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாததால் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரை கொள்ளையர்கள் வாளால் வெட்டியதுடன் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த பெண்ணொருவர் சகல நகைகளையும் எடுத்து தருவதாக கூறியுள்ளார். கொள்ளையர்கள் ஒவ்வொரு இடமாகத் தேடி, அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர்.

கொள்ளையர்களின் செயல் தொடர்பில் திருமண வீட்டின் மணமகள் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகல் (SMS) மூலம் அயல் வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரும் ஏனையவர்களுக்கு அந்த தகவலை அனுப்பியுள்ளார்.

இதனை அறிந்த கொள்ளைக்கும்பல் வெளியில் நின்ற அயல்வீட்டுக்காரரையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

வீட்டில் இருந்தவர்களின் 60பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் கடவுச் சீட்டுக்களும் கைப்பைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.