இந்தியாவில் கோவில் குருக்களாக இருந்து பின்னர் சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து தனியாக வாழ்ந்த நபர் உயிரிழந்த நிலையில் அவர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் Tuni பகுதியை சேர்ந்தவர் அப்பலா சுப்ரமணியம் (70). இவர் கோவில் குருக்களாக இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் இவர் மனைவி உயிரிழந்தார்.
இதிலிருந்து சுப்ரமணியம் மனநிலையில் கோளாறு ஏற்பட்டது, இதன்பின்னர் அவரை தனியாக விட்டு மகன் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துவிட்டார்.
தனியாக வசித்து வந்த சுப்ரமணியம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இரு தினங்களாக வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார் சுப்ரமணியம்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது அவர் சடலமாக கிடந்தார். சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர் அதன் காரணமாக உயிரிழந்தார் என தெரியவந்தது.
சுப்ரமணியம் வீட்டில் ஆங்காங்கே பைகள் இருந்தநிலையில் அதை பிரித்து பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம், அந்த பைகள் முழுவதும் 100, 50, 20,10 ரூபாய் நோட்டுகள் குவியலாக இருந்தன.
இதன்பின்னர் சுப்ரமணியம் மகனுக்கு தந்தை இறப்பு குறித்து தகவல் தரப்பட்ட நிலையில் அவர் உடலுக்கு இறுதிச்சடங்கை செய்தார்.
இந்த சூழலில் சுப்ரமணியம் வீட்டில் இருந்த எடுக்கப்பட்ட பணத்தை இரண்டு நாட்கள் அந்த பகுதி மக்கள் எண்ணிய நிலையில் மொத்த ரூ 6 லட்சம் இருப்பது தெரியவந்தது.
அந்த பணத்தை தொண்டு காரியங்களுக்கு பயன்படுத்துவோம் என அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.