‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து நேற்று உலகம் முழுவதும் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘சாஹோ’. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் 80 கோடி இருந்திருக்கும் என முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. தற்போது கிடைத்த தகவல் படி உலகம் முழுவதும் ரூ.130 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா, தெலங்கானாவில் 52 கோடி, கர்நாடகா 11 கோடி, தமிழ்நாட்டில் 5 கோடி, கேரளாவில் 1 கோடி, மற்ற இந்திய மாநிலங்களில் 31 கோடி, அமெரிக்காவில் 10 கோடி, மற்ற வெளிநாடுகளில் 20 கோடி என 130 கோடியை வசூலித்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள்.
இந்திய அளவில் முதல் நாளில் அதிகபட்சமாக வசூலித்த இரண்டாவது படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு முதல் நாளிலேயே 100 கோடி வசூலித்த இரண்டாவது படம். அதேசமயம் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கவில்லை. பாகுபலி 2 முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடியும், உலகம் முழுக்க ரூ.200 கோடியும் வசூலித்தது.
சாஹோ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் இந்த அளவிற்கு வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. அப்படி விமர்சனங்கள் வந்த நிலையிலும் பெரிய வசூலைப் பெற்றுள்ளது.