வேதனை குறைய யாராவது ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்குமே என்று யோசிக்கிறீர்களா? ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருக்கலாம். ஆனால், சில ஆலோசனைகள்தான் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும்.
இருந்தாலும், பொதுவான சில ஆலோசனைகள் இருக்கின்றன; அவை நிறைய பேருக்குக் கைகொடுத்திருக்கின்றன. மனநல ஆலோசகர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.
1: குடும்பத்தாரும் நண்பர்களும் தரும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்
எவ்வளவு நேரம் தனியாக இருக்கலாம், எவ்வளவு நேரம் மற்றவர்களோடு இருக்கலாம் என்பதை உங்களுடைய தேவைக்கு ஏற்றபடி யோசித்து முடிவு செய்யுங்கள்.
2: சத்தான உணவு சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்
சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள்.
3: நிறைய நேரம் தூங்குங்கள்
மனம் வேதனையில் வாடும்போது உடல் சீக்கிரம் சோர்ந்துவிடும். இந்த சோர்வைச் சமாளிக்க நன்றாகத் தூங்குங்கள்.
4: மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள்
துக்கத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வார்கள் என்பதால், என்ன செய்வது உங்களுக்கு உதவும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
5: கெட்ட பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள்
மதுபானம் அல்லது போதைப்பொருள்களின் பக்கம் திரும்பிவிடாதீர்கள்; அவை பிரச்சினைகளைக் குறைக்காது, இன்னும்தான் அதிகமாக்கும்.
6: மற்ற விடயங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்
எப்போதுமே சோகக் கடலில் மூழ்கியிருப்பதற்குப் பதிலாக அவ்வப்போது மற்றவர்களோடு நேரம் செலவிடுங்கள் அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.
7: எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் செய்யுங்கள்
எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் செய்யும்போது, சகஜ நிலைக்குத் திரும்புவது உங்களுக்கே தெரியும்.
8: முக்கியமான தீர்மானங்களைத் தள்ளிப்போடுங்கள்
முக்கியமான தீர்மானங்களை உடனே எடுத்துவிட்டு பிற்பாடு வருத்தப்படுவதற்குப் பதிலாக, முடிந்தால் ஒருசில வருஷங்களுக்குத் தள்ளிப்போடுங்கள்.
9: சந்தோஷமான சமயங்களை நினைத்துப் பாருங்கள்
இறந்தவரின் நினைவாகச் சில ஃபோட்டோக்களை அல்லது பொருள்களைச் சேர்த்து வையுங்கள் அல்லது டைரி எழுதுங்கள்.
10: வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்காதீர்கள்
எங்கேயாவது போய்விட்டு வாருங்கள். ஒரு நாளுக்கு அல்லது ஒருசில மணிநேரங்களுக்கு அப்படிச் செய்தால்கூட வித்தியாசத்தைப் பார்ப்பீர்கள்.
11: மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்
உங்களுடைய அன்பானவர் இறந்ததை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். அது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பைத் தரும்.
12: வாழ்க்கையில் எது முக்கியம் என்று யோசியுங்கள்
வாழ்க்கையில் எது உண்மையில் முக்கியம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். எது முக்கியம், எது முக்கியமில்லை என்று முடிவு செய்யும் விடயத்தில் மாற்றங்கள் தேவைப்பட்டால் உடனே செய்யுங்கள்.
உங்கள் மனக்காயம் முழுமையாக ஆறாது என்பதுதான் எதார்த்தம். ஆனாலும், நல்ல ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கும்போது கண்டிப்பாக ஆறுதல் கிடைக்கும்.
இதுதான் நிறைய பேருடைய அனுபவம்! துக்கத்தைச் சமாளிக்க உதவும் எல்லா வழிகளுமே இங்கே கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான்; ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில ஆலோசனைகளின்படி நீங்கள் நடந்துகொண்டால், எந்தளவுக்கு நிம்மதி கிடைக்கிறது என்று நீங்களே புரிந்துகொள்வீர்கள்.