பாகிஸ்தானின் லாகூர் நங்கனா சாகிப் பகுதியை சேர்ந்த சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாகவும், மேலும் அந்த பெண்ணை இஸ்லாமியர் ஒருவருக்கு அவரை திருமணம் செய்து வைத்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடும் வேதனை அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை விடுதலை செய்யாவிட்டால் பஞ்சாப் கவர்னரின் இல்லத்தின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்ய போவதாக தெரிவித்திருந்தார்.
எங்கள் வீட்டு பெண்ணை பத்திரமாக மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆகியோர் உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர். மேலும் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அந்த கும்பல் தங்களை மிரட்டுவதாக கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பாகிஸ்தானின் சிறுபான்மையின இனமான சீக்கியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவரும், ஷிரோமணி அகால தளம் எம்எல்ஏவுமான மஞ்சிந்தர் சிங் சிர்சாவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் சிர்சா கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து மேலும் ஒரு பெண் கடத்த பட்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. பாகிஸ்தான் ரோஹாரி நகரில் மேலும் ஒரு இந்து பெண் கடத்தப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவ பெண்களை கடத்தி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, இஸ்லாமிய ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.