நாடாளுமன்றால் திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டம் மற்றும் பழைய மாகாண சபைத் தேர்தல் சட்டம் இரண்டின் கீழும் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையின்றி பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான உயர் நீதிமன்றின் விளக்கம் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இருந்த, விகிதாசார பிரதிநிதித்துவ முறையில், மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியுமா என்று, அறிவிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றின் ஆராய்வு கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்றின் தீர்மானத்தை மாற்ற முடியாது என்று வாதம் சட்டவாளர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
எனவே எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டமையை அடுத்தே இந்த விளக்கத்தை அவர் உயர் நீதிமன்றிடம் கோரினார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.