மனித வாழ்வின் தொடக்கமும், இறுதியும் பாலில் தான். தாய்ப்பாலுக்கு பிறகு விலங்குகளின் பால், விதைகளில் இருந்து பெறப்படும் பால் என தனது அன்றாட உணவு பழக்கத்தில் ரசித்து ருசிக்கிறான். விலங்குகளின் பால் நாம் அனைவரும் அறிந்ததே மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் வரிசையில் கழுதைப்பால் வரை பருகுகிறான்.
விதைகளை அரைத்து அதில் இருந்து பாலெடுப்பது என்று வகைப்படுத்தினால், தேங்காய் பால், பாதாம் பால், நிலக்கடலை பால், கொள்ளுப்பால், பருத்திப் பால்…என பட்டியல் உண்டு. பருத்திப்பாலுக்கு பெயர் போன மதுரையில் எங்கெங்கு காணினும் பருத்திப் பால் கடைகள் தான். இதன் சுவையும், பயனும் அறிந்து தமிழகமெங்கும் பரவியது நல்ல விஷயம் தான்.
பருத்தி விதைகளில் கோலின், விட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது. இதனை triple nutrients என்று கூட அழைக்கலாம். உடலுக்கு ஊட்டமும், வலுவும் தருவதால் பருத்திப் பாலை வாரம் ஒரு முறையாவது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.