கோமாளி படத்திற்குப் பிறகு தனது 25ஆவது படத்தில் ஜெயம் ரவி லக்ஷ்மன் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பாக ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
நித்தி அகர்வால் நடிக்கும் இந்தப் படத்தில் டி இமான் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் தனது 26 ஆவது படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.
டாப்சி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி இணைந்துள்ளார். ஏற்கெனவே பல விளம்பர படங்களில் நடித்துள்ள அவர், இந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது முதன்முறையாக தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால் படக்குழு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. ரகுமான் பங்கேற்பது உறுதியானால் அவரது இசையில் ஜெயம் ரவி நடிக்கும் முதல் படம் இதுவாக அமையும்.