தமிழகத்தில் விநாயக சதுர்த்தி விழாவில் ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (20). ரஜினி ரசிகரான இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொதுமக்களிடம் பணம் வசூலித்து பெரிய விநாயகர் சிலையை வைத்தனர். விழாக்குழுவில் பார்த்தசாரதி, கார்த்திகேயன் மற்றும் தினேஷ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது விநாயகர் சிலை அமைப்பதற்காக பணம் வசூல் செய்ததில் தினேஷ் குமார் பணத்தை ஏமாற்றி விட்டதாக பார்த்தசாரதி கூறியுள்ளார்.
முன்னரே, தினேஷுக்கும் பார்த்தசாரதிக்கும் பெண் விவகாரம் தொடர்பாக முன்பகை இருந்து வந்த நிலையில், பண மோசடி செய்ததாகக் கூறியதைக் கேட்ட தினேஷ் ஆத்திரமடைந்தார்.
பார்த்தசாரதியிடம் அவர் தகராறிலும் ஈடுபட்டார். இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பை அருகில் இருந்தவர்கள் விலக்கி சமரசம் செய்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர் கார்த்திக்கேயன் என்பவர் தினேஷ் குமாரிடம் பணத்தை ஏமாற்றியது குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு இந்த தகவலை யார் உனக்கு கூறியது என தினேஷ்குமார் கேட்க பார்த்தசாரதி தான் கூறியதாக தெரிவித்தார்.
இதனால் பார்த்தசாரதி மீது ஆத்திரப்பட்ட தினேஷ் நள்ளிரவில் கார்த்திகேயனுடன் அவர் வீட்டுக்கு சென்று தூக்கத்தில் இருந்தவரை எழுப்பி சண்டை போட்டார்.
பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது திடீரென இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதியின் கழுத்தில் குத்தினார் தினேஷ். இதைக் கண்ட கார்த்திகேயன் அவரை தடுக்க முயன்றார்.
இதனால், கார்த்திகேயன் இடது கையில் கத்திகுத்து விழுந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்த நிலையில் இருவரும் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் பார்த்தசாரதி வழியிலேயே உயிரிழந்தார், கார்த்திகேயனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.