இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகேலில் நடைபெற்ற முதலாவது டி20 சர்வதேச போட்டியில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாக்கிய காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பல்லேகேலில் நடந்த முதல் டி 20 போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக பந்து வீச இலங்கை அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இலங்கைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸ் ஐசிசி-பின் எலைட் குழுவைச் சேர்ந்த போட்டி நடுவர் ஆண்டி பைக்ரோஃப்ட், 11 இலங்கை வீரர்களுக்கும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் அபராதம் விதித்தார்.
ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.22 க்கு இணங்க, அனைத்து வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசத் தவறினால் ஒவ்வொரு போட்டியாளருக்கும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இலங்கை அணி குறித்த இரண்டு ஓவர்களை வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்ததன் காரணமாக போட்டியில் விளையாடிய 11 வீரர்களுக்கும் ஒரு வீரருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவீதம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.
போட்டி முடிந்தபின் மாலிங்கா குற்றத்தை ஒப்புக்கொண்டு மற்றும் முன்மொழியப்பட்ட அபராதத்தை ஏற்றுக்கொண்டார், எனவே முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
களத்தில் நடுவர்களான ரவீந்திர விமலசிறி, பிரகீத் ரம்புக்வெல்ல, மூன்றாம் நடுவர் லைன்டொன் ஹன்னிபெல் மற்றும் நான்காம் நடுவர் ரன்மோர் மார்டினெஸ் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியதின் அடிப்படையில் இலங்கை அணி மீது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.