எனது தூக்கத்தை குறைத்துக் கொண்டு தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்வதாக உறுதி வழங்குகின்றேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரது முழுமையான ஆசிர்வாதத்துடன், நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு தனக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“2020ம் ஆண்டு சாதாரண மக்களை மையப்படுத்திய அரசாங்கமே அமைக்கப்படும். அரசியல் அதிகாரம் ஒரு குடும்பத்திற்கு மாத்திரம் உரித்துடையது என்று எவரும் உரிமை பத்திரம் எழுதிக் கொடுக்கவில்லை.
குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக்கி பலவீனமடைந்துள்ள அரசியல் நிலையினை பலப்படுத்தவே ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றார்கள்.
இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் கிடையாது.
தான் தற்போது காலை 4 மணிக்கு எழுந்ததிலிருந்து இரவு 12 மணி வரையில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுகின்றேன். தனது தூக்கத்தை குறைத்துக் கொண்டு தொடர்ந்தும் சேவை செய்வதாக உறுதி வழங்குகின்றேன்.
தன்னுடைய கைகளில் இரத்தக் கறைகள் இல்லை. திருட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. தான் கொலைகாரர்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.