பாடசாலைக்கு செல்லும் பெரும்பாலான குழந்தைகளுக்கு காலை உணவு பிரட், பிஸ்கட்டுடன் முடிந்து விடுகிறது. காலை நேர இடைவேளைக்கு இதே பிஸ்கட்டுகள் தான், வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் கூட பிஸ்கட்டுகள் தான்.
இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்திருக்கும் பிஸ்கட்டுகள் ஆரோக்கியமானது இல்லை என்பதே உண்மை. மருத்துவர்கள் கூறுகையில், பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.
பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்கு திறவுகோலாக அமையும்.
இனிப்புக்காக சுக்ரோஸ் கலக்கப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகிறது, இதனால் இதயம் சார்ந்த பிரச்சினைகள், கொழுப்பு சத்து அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. உப்பு பிஸ்கட்டில் சோடியம் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
இத்துடன் கெட்ட கொழுப்பும் அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிக்கும், சிறுவயதிலேயே பிஸ்கட்டுகளை அதிகம் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதுடன் குடல் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும்.
ஒருநாளைக்கு எத்தனை சாப்பிடலாம்? வாரம் ஓரிரு முறை பிஸ்கட் சாப்பிடுவதில் தவறு இல்லை, அதிகபட்சம் ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம், க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றே போதுமானது, இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பொருந்தும்.
உடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிடப் பழக வேண்டும். வெறும் சுவைக்காக மட்டுமே பிஸ்கெட்டை தேர்ந்தெடுப்பதைவிட இதுபோன்ற நார்ச்சத்து, சிறுதானியங்கள் என சத்துகள் கொண்ட பிஸ்கட்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இதுபோன்ற ஸ்பெஷல் பிஸ்கெட்டை வாங்கினாலும், கவரில் இருக்கும் நியூட்ரிஷன் லேபிளை கவனிக்க வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு ”நோ” சொல்லுங்க பிஸ்கட்டின் பணியே பசியை அடக்குவது தான், எனவே பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக பிஸ்கட்டை கொடுத்தால் மதியம் பசி எடுக்காது. இது மட்டுமின்றி பிஸ்கட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும், குழந்தைகளையும் மந்தமாக்குகிறது.
இதுவே காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். எனவே குழந்தைகளுக்கு தொடக்கத்திலிருந்தே ஆரோக்கியமான நம் பாரம்பரிய உணவுகளை கொடுத்துப் பழக்குவது பெற்றோர்களின் கடமையே.