சீனாவில் ஃபேஸியல் பேமென்ட் என்ற புதிய நவீன பணம் செலுத்தும் முறை பிரபலமாகி வருகிறது.
பணத்தை கையில் வைத்துக் கொண்டு செலவழித்த காலம் போய் டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தும் முறை பயன்பாட்டுக்கு வந்தன.
பின்னர் அதை எடுத்துச் செல்வதற்குக் கூட மறந்துபோன மக்களுக்காக அதையும் தாண்டி ஒன்லைன் பேமென்ட் முறைகள் வந்தன. பேடிஎம், கூகுள் பே என ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையில் பணம் செலுத்த வழிகள் பிறந்தன.
இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கும் வகையில் சீனாவில் ஃபேஸியல் பேமென்ட் தொழில்நுட்பம் (facial payment technology) பிரபலமடைந்து வருகிறது.
இதில் என்ன விஷேசம் என்னவென்றால், நீங்கள் ஷொப்பிங் செய்ய செல்லும்போது பணம், கார்ட்கள், ஸ்மார்ட் ஃபோன் என எதையுமே எடுத்துச் செல்ல வேண்டாம். ஏன் க்யூஆர் கோட் (QR code) முறைகூட இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு முன்னால் ஒன்றும் இல்லை என்றளவுக்கு ஆகிவிட்டது.
நீங்கள் செல்லும் ஷொப்பிங் மோலில் உங்களுக்குத் தேவையான பொருளை வாங்கிவிட்டு அங்கிருக்கும் பிஓஎஸ் (POS) இயந்திரத்தின் முன்னால் நின்றாலே போதும் அதிலிருக்கும் கமரா உங்களின் முகத்தை ஆராய்ந்து வங்கிக் கணக்கில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்து சரியான பணத்தை உங்களின் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும்.
இந்த முறையில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும்கூட சீனர்கள் பலரும் இதனை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.