ஒரே ஆட்டத்தில் வரிசையாக கோல்டன் டக் ஆன பேட்ஸ்மேன்கள்! விநோதமான சாதனையை செய்த நியூசிலாந்து!

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையான மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரினை முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று,  நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அந்த அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பல்லேகெலேயில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பின்னர் 126 ரன்கள் அடித்தால் என்ற எளிதான வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த ஆட்டத்தின் 3-வது ஓவரை கேப்டன் மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் கொலின் முன்றோ க்ளீன் போல்டானார். இந்த விக்கெட்  மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் மலிங்கா படைத்தார்.

ஆனால் அதன் பிறகு வந்த பந்துகளில் மேலும் சாதனையை படைத்துவிட்டார் மலிங்கா. அடுத்து வந்த ருதர்போர்டு ரன் ஏதும் எடுக்காமலும் எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினர், அவருக்கு அடுத்து வந்த கிராண்ட்ஹோமை ரன் ஏதும் எடுக்காமலும் க்ளீன் போல்டாக்கினார். இதன்மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார். அடுத்த வந்த ராஸ் டெய்லரை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றி தொடர்ச்சியாக நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார் மலிங்கா.

இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார் மலிங்கா என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் 2 3 4 ஆவது வரிசையில் இறங்கிய வீரர்கள் கோல்டன் டக் ஆவது சர்வதேச கிரிக்கெட்டில் இதுவே முதல் முறையாகும்.