ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பிரதித் தலைவரான தனக்கும் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என யாழில் வைத்து கூறியிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசா, ஐனாதிபதித் தேர்தல் வருகின்ற நேரத்தில் இங்கு விளையாடும் போது சிக்சர் அடித்தது போன்று சிக்சர் அடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாசா தன்னுடைய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் யாழ்.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரிக் கிராமத்தை பொது மக்களிடம் கையளித்திருந்தார்.
இந் நிகழ்வின் பின்னர் ஊடகவியியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தெரிவித்ததாவது,
எங்கள் கட்சிக்குள் பிரச்சனைகள் இல்லை. எங்கள் கட்சியின் தலைவருக்கும் பிரதித் தலைவரான எனக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை. நாங்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் கதைத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். அதற்கமைய நாளையும் எங்களுக்குள் ஒரு சந்திப்பு நடக்க இருக்கின்றது.
ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் எங்கள் கட்சியில் எனக்கு நம்பிக்கை உள்ளது. கட்சியின் பிரதித் தலைவர் என்ற வகையில் அந்த தேர்தலை எதிர் கொள்வதில் எனக்குப் பிரச்சனையில்லை. அது குறித்து யாரும் பயப்பட வேண்டாம். அவ்வாறு ஐனாதிபதி தேர்தல் வந்தால் இங்கு நான் இளைஞர்களுடன் கிரிக்கேட் விளையாடும் போது சிக்சர் அடித்தது போன்று அத் தேர்தலிலும் சிக்சர் அடிப்பேன் என்றார்.
இதே வேளை இச் சந்திப்பினைத் தொடர்ந்து யாழில் நடைபெறும் என்ரபிரைஸ் சிறிலங்கா தேசிய கண்காட்சி நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார். அங்கு இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அங்கு சஜித் பிரேமதாசா கூறியதாவது,
ஐனாதிபத் தேர்தல் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. அத் தேர்தல் வேட்பாளர்கள் சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும் பேசப்படுகிறது. ஆயினும் அப்படியாக ஒரு தேர்தல் வரும் போது அதற்கான தீர்வு எங்களுக்குக் கிடைக்கும். மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின் படி தலைவர் தான் போட்டியிட வேண்டுமென்றில்லை. கடந்த முறை தேர்தலின் போதும் வேறு ஒருவர் தான் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் எனவும் மேலும் தெரிவித்தார்.