13 வது திருத்தத்தின் ஊடாக மாகாணசபைகளை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும்!

ஒரே நாட்டுக்குள் அதிகாரங்களை உச்ச அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதே எப்போதும் எமது நிலைப்பாடாக இருக்கின்றது. அத்தகைய அதிகாரப் பகிர்விலான தீர்விற்காக கடந்த ஐனாதிபதித் தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா, 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைகள் பலப்படுத்தப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் என்ரப்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவொரு பிரச்சனைகளும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக கட்சியாகும். எமது கட்சிக்குள் சர்வாதிகார போக்குகள் இல்லை. பேச்சு மூலமும் ஐக்கியம் ஊடாகவும் நாம் ஜனநாயக ரீதியாக தீர்மானம் எடுப்போம். எமது கட்சி தனிப்பட்ட குடும்பத்திற்கோ அல்லது ஒரு தரப்பினருக்கோ மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அவ்வாறானவர்களே எமது கட்சிக்குள் பிரச்சனைகள் இருப்பதாக காட்ட முற்படுகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞானபத்தில் ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரம் பகிரப்படும் என கூறப்பட்டிருந்தது. இதற்கு வடக்கு கிழக்கு மக்கள் முழுமையான அங்கீகாரத்தை வழங்கினார்கள். அது தான் எமது நிலைப்பாடாக இருக்கிறது. அதனைவிடுத்து அன்றைய நிலைப்பாடு இன்றைய நிலைப்பாடு என்றில்லை.
எமக்கு என்றுமே ஒரே நிலைப்பாடுதான். வசனத்தில் விளையாடலாம். ஆனால் சொல்லின் அர்த்தம் மக்கள் மனதில் இருக்க வேண்டும். 13வது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளை பலப்படுத்தப்படும். மாகாண சபை மூலம் மக்களுக்கு முழுமையாக சேவையாற்றக் கூடிய வகையில் வழிவகைகள் செய்யப்படும்.

நாட்டில் உள்ள ஒரு மக்கள் கூட்டம் தாம் இரண்டாம் மூன்றாம் பிரஜைகளாக வாழ்கின்றோம் என எண்ணக் கூடாது. இலங்கையில் அனைவருக்கும் ஒரேநாடு ஒரே தேசம் ஒரே மக்கள். மத, இன ரீதியாக பார்க்காது அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.
நாட்டில் சட்டத்திலும் அரசியலமைப்பிலும் இவ்விடயம் உள்ளது. ஒரு பிரிவினரை புறம் தள்ளி நாம் செயற்பட முடியாது. நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக மதிக்கும் அரச நிர்வாக கட்டமைப்பு உள்ளது என்றார்.

இதன்போது அரசியல்கைதிகள், காணமல் போனோர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, மனிதாபிமானத்துடனும் மனித தன்மையுடனும் நாட்டின் சடட்ட திட்டங்களுக்கு அமைவாகவே தீர்வு காணப்படும் என்றார்.