காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை ஊர்மிளா மடோன்கர் இன்று காலை அறிவித்தார். அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கிருபாஷங்கர் சிங் கட்சியில் இருந்து விலகினார்.
கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை ஊர்மிளா, நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் மக்களவை தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் மஹாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி மற்றும் முரண்பாடுகள் காரணமாகவே ஊர்மிளா விலகல் முடிவை எடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இன்று காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் கிருபாஷங்கர் சிங் கட்சியில் இருந்து விலகினார். அவர் தனது ராஜினாமாவை டெல்லியில் உள்ள காங்கிரஸ் மகாராஷ்டிரா பொறுப்பாளர் மல்லிகார்ஜூன் கார்கேவிடம் இன்று சமர்ப்பித்தார்.
ஒரே நாளில் இருவர் விலகல்களும் மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியில் ஏதோ உள்கட்சி முரண்பாடுகள் இருப்பதை காட்டுகிறது. இதனை கட்சி மேலிடம் ஆராய்ந்து செயல்பாடுகளை சரி செய்யவில்லை எனில் மிகப்பெரிய பின்னடைவு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும் என கூறப்படுகிறது.
உட்கட்சி விவகாரத்தில் காங்கிரசு நடவடிக்கை எடுக்குமா என மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.