ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் அரசு எழுப்பியுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, காஷ்மீர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சீனாவை தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், சர்வதேச அமைப்புகளில் இந்த விவகாரத்தை எழுப்ப உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்நிலையில் ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டம் செப்.,9 முதல் வரும் செப் 27 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி இன்று பேசினார் . அவர் பேசும்போது, காஷ்மீரில் மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். . தன்னிச்சையான பன்னாட்டு விசாரணை ஆணையம் (Commission of Inquiry) அமைக்க வேண்டும். காஷ்மீருக்கு என தனி ஐநா மனித உரிமைகள் சிறப்பு நிபுணரை ( special procedures mandate holders) நியமிக்க வேண்டும். பன்னாட்டு ஊடகங்களையும் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளையும் காஷ்மீருக்குள் அனுமதிக்க வேண்டும் – என அவர் கோரினார்.
இந்த கூட்டத்தில், இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த அஜய் பசாரியா, இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்கு பகுதி செயலாளர் விஜய் தாகூர் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
விஜய்தாக்கூர் சிங் பேசுகையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது முற்றிலும் இந்திய விவகாரம் என்றும், இதனால் கல்வி உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கும் சூழல் உருவாகி இருப்பதாக அவர் கூறினார். மேலும் காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது அமைதி நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல நேரலை வர்ணணை செய்வது போல, இந்தியா மீது பொய்யான புகார்களை அடுக்கு அடுக்காக கூறும் நாடு, உலக பயங்கரவாதத்தின் மையமாக இருப்பதை உலக நாடுகள் அனைத்தும் அறியும் என பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் பாகிஸ்தானை ஊமைக்குத்தாக பதிலடி கொடுத்துள்ளார். இந்திய பதிலடி கொடுக்கும் முன்னரே உலக நாடுகள் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டுவது போல தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேசி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்று கூறியது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. மேலும் இந்திய அங்கே இன படுகொலை நடத்துவதாக கூறியுள்ளார். இதுவரை காஷ்மீரை சர்ச்சைக்கு உரிய நிலம் என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில் முதல்முறையாக, காஷ்மீரை இந்தியாவின் மாநிலம் என கூறியது வியப்பாக தான் இருக்கிறது. இந்த அந்தர் பல்டிக்கு பின்னால் எதாவது காரணம் இருக்குமா என்பது போக போகத்தான் தெரியும்.