அசாமில் இருக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமையை உறுதி செய்யும், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் கடந்த வாரம் வெளியாகியது. கடந்த முறை வெளியாகிய பட்டியலில் அங்கு விண்ணப்பித்த 3 கோடியே 29 லட்சம் பேரில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர்கள் மட்டுமே வரைவுப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து அங்கு விடுபட்ட பலரும் தங்கள் பெயரையும் சேர்க்க வேண்டும் என மீண்டும் விண்ணப்பங்களை அளித்தனர்.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் விதமாக தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைவுப் பட்டியலில் அசாமில் வாழும் மக்களில் 41 லட்சம் பேர் விடுபட்டனர். தங்களையும் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் இணைக்க அவர்கள் கோரிக்கை வைத்து மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், மொத்தம் 3,11,21,004 நபர்கள் இறுதி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளார்கள். கோரிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் உட்பட 19,06,657 நபர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள் இந்த முடிவில் திருப்தி இல்லையென்றால் நாங்கள் இந்தியர் என்பதற்கான ஆதாரணங்களை வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு முன் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 19 லட்சம் நபர்களில் ஒருவராக ஒருவரான டாக்டர் ஜிதேந்திர நாத் கோஸ்வாமி இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் அசாமில் இருந்து வந்த புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் சந்திரயன் 2 மிஷனின் ஆலோசகர் ஆவார். அவர் மட்டுமில்லாது அவரது குடும்பத்தினர் யாருமே அந்த பட்டியிலில் இடம்பெறவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. விஞ்ஞானி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியர்கள் இல்லை என தேசிய குடிமக்கள் பதிவேட்டின் பட்டியல் படி தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
இது குறித்து விஞ்ஞானி ஜிதேந்திர நாத் கோஸ்வாமி கூறுகையில், நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக அகமதாபாத்தில் வசித்து வருகிறோம். எங்கள் பெயர்களை என்.ஆர்.சி-யில் சேர்ப்பதற்குத் தேவையான நடைமுறைகளை செய்ய நாங்கள் தவறிவிட்டோம். ஆனால் எங்கள் குடும்பம் அசாமில் தான் உள்ளது, மேலும் எங்களுக்கு ஜோர்ஹாட்டில் நிலங்கள் உள்ளன. எதிர்காலத்தில் இந்த பட்டியல் படி ஏதேனும் சிக்கல் இருந்தால் , நில ஆவணங்களைக் காண்பிப்பதன் மூலம் நாங்கள் இந்தியர்கள் என நிரூபிக்க முடியும்” என சந்திரயான் 2 ஆலோசகர் டாக்டர் கோஸ்வாமி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.