திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று இருக்கின்றது. நேற்று மாலை இந்த கடைக்கு பல்லடம் ஜே.கே.ஜே. காலனியை சேர்ந்த மூர்த்தி (35) என்பவர், வந்து அங்கு மது வாங்கி குடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் மதுக்குடிக்க விரும்பினார்.
அங்கிருந்த மது விற்பனையாளரிடம் மது வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் கேட்கவே, பணம் இல்லை இலவசமாக மது கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால், விற்பனையாளர் மது கொடுக்கமுடியாது என மறுத்து விட்டார். இதன் காரணமாக மது ஆத்திரமடைந்த மூர்த்தி மதுபாட்டிலை உடைத்து தன்னுடைய உடலை கீறி இருக்கின்றார்.
இதனால் அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மதுக் கொடுக்கவில்லை எனில் இதே இடத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். ரத்தம் சொட்ட, சொட்ட அந்த பகுதியிலேயே நடமாடியுள்ளார்.
உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். அவர்களிடமும் குடிக்க பணம் கேட்டு கெஞ்சியுள்ளார். அதன் பின்னர், லாவகமாக பேசி மூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.