மதுரையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த முனியாண்டி (29) என்பவருக்கும், பவித்ராதேவி என்கிற இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மாட்டுத்தாவணி அருகே உள்ள மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் திருமணம் நடைபெற இருந்தது.
இதற்காக இருவீட்டை சேர்ந்த உறவினர்களும் திரளாக வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில், கையில் குழந்தையுடன் வந்த கர்ப்பிணி பெண் ஒருவர், சினிமா பட பாணியில் ‘நிறுத்துங்க’ என கூச்சலிட்டுள்ளார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட, அங்கிருந்தவர்கள் பெண்ணிடம் விசாரிக்க ஆரம்பித்தனர். தனியார் பள்ளியில் வேலை செய்து வரும் ஆசிரியை ஈஸ்வரி (37)-க்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் முனியாண்டியுடன், ஈஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூத்த வயது பெண்ணாக இருந்தும் கூட அவருடன் முனியாண்டி வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
இது முனியாண்டி வீட்டாருக்கு தெரியவர திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர். இதற்கிடையில் ஈஸ்வரிக்கு, தான் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது. அதனை முனியாண்டியிடம் தெரியப்படுத்த பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.
இன்று முனியாண்டியின் நண்பருக்கு போன் செய்து கேட்டபோது, அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
உடனே மண்டபத்திற்கு விரைந்த ஈஸ்வரி திருமணத்தை தடுத்து நிறுத்தி தனக்கு நியாயம் வேண்டும் என தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்தார். இதனை சற்றும் எதிர்பாராத மணப்பெண் குடும்பத்தினர் அதிர்ந்துபோயுள்ளனர்.
அதேசமயம் இதற்கு எந்த மறுப்பும் தெரியாமல் முனியாண்டி மௌனமாக இருந்ததால், மணப்பெண் பவித்ராதேவி உடனடியாக திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் இருதரப்பினரும் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு முனியாண்டி வீட்டாரின் மீது புகார் கொடுத்த பவித்ராதேவியின் தந்தை, திருமணத்திற்கு செலவு செய்த தொகையை திருப்பி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அதற்கு முனியாண்டி குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, ஈஸ்வரியுடன் சேர்ந்து வாழ்வதாக முனியாண்டியும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மூன்று தரப்பும் சமரசம் செய்துகொண்டு பொலிஸ் நிலையத்திலிருந்து கிளம்பினர்.
இந்த சம்பவத்தால் விழாக்கோலம் கொண்ட திருமண மண்டபம் கடைசியில் வெறிச்சோடி காணப்பட்டது.