ரணில் பிரபலத்தை இழந்து விட்டார்

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக முன்னோக்கி வர வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கேள்வி – சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ரணிலுக்கு முடியாது என்று சொன்னீர்கள், பின்னர் ரணிலுக்கு முடியும் என்று கூறினீர்கள், தற்போது ரணிலுக்கு பதிலாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முயற்சித்து வருகிறீர்கள். அது ஏன்?.

பதில் – ரணிலுக்கு முடியாது என்று சுவரொட்டி ஒட்டியது உண்மை. அப்போது சந்திரிக்காவுக்கு எதிராக இருந்த பிரதான பலமான சக்தி ரணில் விக்ரமசிங்க, இதன் காரணமாவே அவருக்கு முடியாது என்று பிரச்சாரம் செய்தோம். ஆய்வு முடிவுகளின்படியே அந்த தீர்மானத்தை எடுத்தோம்.

99ஆம் ஆண்டு அளவில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் சரி நிகர் சமமான ஆதரவு இருந்தது. தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்தின.

அது மாத்திரமல்ல, உண்மையில் 2005ஆம் ஆண்டும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மகிந்த ராஜபக்சவும் சரி சமமான ஆதரவு இருந்தது. வடக்கில் விடுதலைப் புலிகள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதை தடுத்து அல்லது வாக்களிக்காமல் தவிர்த்தமையே அவரது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இது போன்ற இணையான பிரபலத்துவம் அப்போது வேறு எந்த அரசியல்வாதிக்கும் இருக்கவில்லை. எனினும், அன்று இருந்த பிரபலத்துவம் தற்போது அவருக்கு இல்லை. எந்த பிரபலமான நபருக்கும் இந்த நிலைமை ஏற்படும். இதனை கூறுவது குறித்து எவரும் கோபிக்க வேண்டிய அவசியமில்லை. நான் ஒழித்து மறைத்து எதனையும் கூற மாட்டேன்.

ரணில் விக்ரமசிங்க உண்மையில் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஜனாதிபதி என்பதில் மாற்று கருத்தில்லை. எனினும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து கருத்து கணிப்புகளிலும் ரணில் விக்ரமசிங்கவினால் வெற்றி பெற முடியாது என்றே கூறுகின்றன.

இதுதான் உண்மை என்பதால், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்வர வேண்டும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.