சென்னையில் முதன்முறையாக ஆசையுடன் இருசக்கர வாகனம் ஓட்ட பழகிய அபிநயா பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு இளம்பெண் ஒருவர் பலியாகியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதற்கு அருகே படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, படுகாயமடைந்த இளைஞர் 21 வயதான அண்ணாமலை என்றும், உயிரிழந்த இளம்பெண் 20 வயதான அபிநயா என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தனியார் ஷோரூமில் வேலை செய்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்டபட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அபிநயா வேலையை விட்டு நின்றுவிட்டார்.
இந்த நிலையில் சம்பள பாக்கி இருப்பதாக கூறி வீட்டில் இருந்து வெளியில் கிளம்பியுள்ளார். குன்றத்தூரில் இருசக்கர வாகனத்தில் காத்துக்கொண்டிருந்த அண்ணாமலையிடம், பைக் ஓட்ட கற்று தருமாறு கூறியுள்ளார்.
அதற்கு சம்மதித்த அண்ணாமலை அபிநாயாவிடம் தனது பைக்கை கொடுத்துவிட்டு பின்னால் அமர்ந்துள்ளார். அப்போது நிலைதடுமாறிய அபிநயா, அங்கிருந்த தடுப்பு சுவற்றில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு புறம் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட அண்ணாமலை பலத்த காயமடைந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.