யாழ்ப்பாணத்தில் பிரமிட் வகை வியாபாரத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனம், தம்மை ஏமாற்றி வருவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இலங்கை மத்திய வங்கியிலும் ஒருவர் முறையிட்டுள்ளார்.
தம்மை ஏமாற்றி பொருட்களை விற்பனை செய்துள்ளதாகவும், அதை அறிந்த பொருட்களை மீள ஒப்படைத்தபோதும், அதற்குரிய பணத்தை தர மறுப்பதாகவும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கந்தர்மடம் சந்திக்கு அருகிலுள்ள பிரமிட் வகை நிறுவனமே இந்த ஏமாற்று செயற்பாட்டில் ஈடுபடுகிறது.
தம்மிடம் பெறும் பணத்தின், பாதி பெறுமதியிலும் குறைந்த பொருட்களையே வழங்குகிறார்கள் என்று முறையிட்டுள்ளனர்.
செலுத்தும் பணத்திற்குரிய பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நகைகளை விற்றும் பணம் செலுத்தினோம். ஆனால் அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபடுகிறது. கணவரிற்கு தெரியாமல் நகைகளை அடவு வைத்து 90,000 ரூபா செலுத்தினேன். அவர்கள் வழங்கிய பொருட்களின் பெறுமதி 30,000 ரூபாதான் என ஒரு பெண் முறையிட்டுள்ளார். தம்மை தொடர்பு கொண்டவர் தலைமறைவாகி விட்டார் என்றும் தெரிவித்தார்.
நிறுவனத்திற்கு சென்றால் உரிய பதில் தருகிறார்கள் இல்லை. வழங்கப்பட்ட பொருளை சேதாரமின்றி திருப்பி கொடுத்தும் பணம் தரவில்லை. மேலும் சிலரை இணைத்து தருவதன் மூலம் பணமீட்டலாம் என்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பாதிப்பட்ட மூவர் அண்மையில் பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, பணத்தை திருப்பி கொடுப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆனால் திருப்பிக் கொடுக்கவில்லை.
யாழில் நடந்த என்ரப்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த மத்திய வங்கியின் காட்சிக்கூடத்தில், இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிறுவனம் சாவகச்சேரியில் இயங்கிய நிலையில், சாவகச்சேரி நீதிமன்றம் தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது