இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி நாளை இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக இன்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். மழை அதிகமாக பெய்ததால் உள்அரங்கத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பயிற்சி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். இந்திய அணிக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்றும் வெற்றி பெரும் எண்ணத்துடன் விளையாடுவோம் என அறிவித்தார்.
இறுதியாக அனைவரும் எதிர்பார்த்தது போலவே தோனியின் ஒய்வு குறித்து கேட்க, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்பொழுதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டவர் என கூறியுள்ளார். அதேபோல அணிக்கு என்ன தேவையோ அதனை அளிப்பதில் மிகுந்த போராட்ட குணத்தை உடையவர்.
அணிக்காக அவர் எப்பொழுதும் போராட்ட குணத்துடனே விளையாடி வந்துள்ளார். அவரைப் போன்ற மதிப்புமிக்க வீரர் அணிக்காக விளையாடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அவருடைய ஓய்வு முடிவை அவரிடமே விட்டு விடுங்கள் என கோலி தெரிவித்துள்ளார்.