வாட்ஸ் ஆப் குழுக்களில் தொடர்பில் இருந்த இளைஞரிடம் கோவை விசாரணை!

பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ் ஆப் குழுவில் துப்பாக்கி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டதாக, வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞரைப் பிடித்து கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் பாருக் கெளசீர் என்பவர் தங்க நகைப் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், பழுதான தனது செல்போனை சர்வீஸ் செய்ய கடையில் கொடுத்துள்ளார். இதையடுத்து, பாருக் கெளசீர் செல்போனை கடையின் உரிமையாளர் பரிசோதித்துள்ளார். அப்போது, பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ் ஆப் குழுவில் துப்பாக்கி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் பகிரப்பட்டிருப்பதைப் பார்த்த கடையின் உரிமையாளர் கோவை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பாருக் கெளசீரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது செல்போனை ஆராய்ந்த போது, துப்பாக்கிகள் குறித்து கூகுளில் தேடிப் பார்த்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ் ஆப் குழுவை நிர்வகிப்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்த பாருக் கெளசீரிடம் விசாரணையை தீவிர படுத்திய போலீசார், அவரது ரேசன் அட்டை மற்றும் ஆதார் அட்டை வைத்து பார்த்ததில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியக் குடிமகனுக்கான ஆவணம் கிடைத்தது எப்படி என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஏற்க்கனவே  உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.