மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை குப்பைத் தொட்டியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.
ஜீவா நகர் திருவள்ளுவர் தெருவில் அதிகாலை சுமார் 4 மணி அளவில் குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அருகில் சென்று பார்த்த அக்கம் பக்கத்தை சேர்த்தவர்கள்., பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் குழந்தை ஒன்று குப்பைத் தொட்டியில் கிடப்பதை கண்டு அதிரிச்சி அடைந்தார்கள்.
அதன் பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்கள். இதை தொடர்ந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் பச்சிளம் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தை மீட்கப்பட்ட இடத்துக்கு அருகே தனியார் மருத்துவமனை உள்ளதால் அங்கு கடந்த 2 நாட்களில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் வேறு யாராவது குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சென்றார்களா என்னும் கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.