பொதுவாக பெண்களுக்கு இயல்பாகவே திருமணம், குழந்தை பிறப்புக்குப் பின் எடை கூடிவிடும். இதற்கு கர்ப்ப காலத்தில் எடை கூடுவது முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. கர்ப்ப காலத்தில் 12 கிலோ வரை எடை கூடலாம்.
எப்படியிருந்தாலும் இந்த பிரசவத்திற்குப் பின்பான உடல் எடைக் குறைப்பில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை தற்போது காணலாம்.
எடைகுறைப்பு மெதுவாக நடக்க வேண்டும் ஏன்?
கருபுற்றிருக்கும் போது உடல் எடை 9 மாதங்கள் நிதானமாகவும், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரித்திருக்கிறது. அப்படியிருக்க உடல் எடையைக் குறைக்கும் பொழுது சட்டெனக் குறைத்தால் அது பெரிய தீங்கில் கொண்டுபோய் விடுமாம். ஆகவே உடல் எடையைக் குறைக்கும் போது சிறிது சிறிதாக குறைப்பதே மிகவும் நல்லதாகும்.
குழந்தை பெற்றெடுத்த பின்பு முதல் 40 நாட்கள் தாய்மைக்கு முக்கியமான காலம் என்றே கூறலாம். உடல் அளவிலும், மன அளவிலும் பல வேதனைகளைக் கடந்து வந்திருக்கும் இத்தருணத்தில் பெண்கள் நன்றாக சாப்பிட்டு நல்ல ஓய்வு எடுத்து தங்களை உடல் அளவிலும், மனதளவிலு் சீராக்கிக் கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று உணவினை சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடுமாம்.
தாய்ப்பாலும் உடல் எடைக்குறைப்பும்
நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயங்களில் நிச்சயமாக நீங்கள் வழக்கமாக உண்பதை விட 300 கலோரி அளவில் சரியான ஊட்டச்சத்துள்ள உணவினை நீங்கள் உண்ண வேண்டும். ஆகவே நீங்கள் தாய்ப்பால் கொடுத்துவரும் சமயத்தில் டயட் இருப்பது நல்லதல்ல. இருப்பினும் நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் 500 கலோரிவரை உங்கள் எடைக்குறைப்பு நிகழ்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் உணவு வகைகளை எடுத்துக்கொள்வதில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டுமாம்.
எடைகுறைப்பை எப்பொழுது ஆரம்பிக்கலாம்?
பேறுகாலம் முடிந்த 40 நாட்களுக்கு பின்பு மெல்ல மெல்ல உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதிலும் சுகப்பிரசவம் ஆனவர்கள் இதற்கு முன்னரே சின்ன சின்ன பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் நிச்சயம் மருத்துவரின் அனுமதியுடன் அவர்கள் சொல்லும் வரை காத்திருந்து அதன் பின் எளிய உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்.
உடற்பயிற்சிகளை ஆரம்பிப்பவர்கள் உங்கள் உடலால் எவ்வளவு முடியும் என்பதை அதுவே சொல்லிவிடும். ஆகவே அதுவரை முயற்சிப்பது தான் நல்லது. அதனைத் தாண்டி தீவிரமாக முயற்சிக்கக்கூடாது.
பிரசவத்திற்கு பின்பு எடை குறைப்பின் முக்கியம்
உங்களுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் இருந்தால் உடல் எடை குறைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதிகப்படியான உடல் எடை உங்கள் இரண்டாவது கருத்தரிப்பிற்கு பெரிய தடையாகவே மாறிவிடும். மேலும் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கும் வழிவகுக்கலாம்.
மேலும் இந்த வகை உடல் பருமனால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படக்கூடும். அதனை ஒட்டி ஒரு சில உறுப்புகள் செயல் இழப்பும் நடக்கலாம். ஆகவே பிரசவத்திற்குப் பின்பான உடல் எடை குறைப்பு நிச்சயம் தேவையான ஒன்றுதான்.
பிரசவித்த பெண்களுக்கான உடற்பயிற்சி
இந்த உடற்பயிற்சியினை சுகப்பிரசவம் என்றால் மூன்று மாதங்களுக்கு பின்பும் அறுவை சிகிச்சை என்றால் சில காலங்கள் கழித்து மருத்துவரின் ஆலோசனைகளோடு செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சி
மிக மெதுவான நடையில் ஆரம்பித்து நடுத்தரமான நடை வரை நீங்கள் நடக்க முயற்சிக்கலாம். ஆரம்பித்ததும் வயிற்றுப் பகுதியை குறைக்க வேண்டும் என்று முழு கவனத்தையும் அதில் செலுத்தாமல், நடப்பதன் மூலம் உடலின் மொத்த எடையும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும்.
உடல் வலுவிற்கான பயிற்சிகள்
அதன் பின் இறுதியாக உங்கள் தசைகளுக்கு வலு சேர்க்கக்கூடிய பயிற்சிகளை நீங்கள் செய்து வரலாம். இரண்டு மூன்று உடற்பயிற்சிகள் இணைந்து சில பயிற்சிகள் செய்யும்போது உங்கள் தசைகள் வலுப்படும்.
பயிற்சி 1
தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். உங்கள் கைகளை உங்கள் தோள்களுக்கு நேராக வைக்கவும்.
தரையில் இருந்து மெதுவாக உங்கள் கால்களை உயர்த்தவும்.
பின்னர் மெதுவாக கால்களை இறக்கவும். கால்கள் பூமியில் படும்போது உங்கள் வயிற்றுப் பகுதி மிக சுலபமாக எடை குறைப்பிற்கு தயாராகும்.
ஆரம்பிக்கும் போது இது போல 8 தடவை 2 செட்டாக செய்யவும்.
பயிற்சி 2
தரையில் படுத்து கால்களை மடக்கிக் கொள்ளவும். பாதங்கள் தரையில் ஊன்றி இருக்க வேண்டும்.
அப்படியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அப்போது உங்கள் வயிறு நன்றாக உள்ளிழுக்கும் படி இந்த மூச்சு விடும் பயிற்சியை செய்ய வேண்டும். இதைப் போல மூச்சை உள்ளிழுத்தபடியே 5 நொடிகள் இருக்கவும்.
மூச்சை வெளியே விடும்போது உங்கள் இடுப்பு பகுதியை சற்றே மேலே தூக்கவும். இதைப்போல 5 நொடி இருக்கவும். பின் இயல்பு நிலைக்கு வரவும்.
இதைப்போல 8 தடவை 2 செட்டாக செய்யவும்.
பயிற்சி 3
முன்பு செய்ததைப் போலவே தரையில் படுத்து முழங்கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றவும்.
கைகளை தலைக்கு பின்னே கோர்த்துக் கொள்ளவும்.
உங்கள் தலையையும் தோள்களையும் மெல்ல உயர்த்தவும்.
இதைப்போல 8 தடவை இரண்டு செட் ஆக செய்யவும்.
எடைக்குறைப்பு நேரத்தில் செய்ய வேண்டியது
- டயட் செய்வதை தவிர்த்து, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- வழக்கமான மூன்று நேர உணவை விட சிறிது சிறிதாக ஆறு வேலை உணவு சாப்பிடுவதும் இடைவேளைகளில் ஆரோக்கியமான பழங்கள் போன்றவைகளை சாப்பிடுவதும் உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உதவி செய்யும்.
- காலை நேர உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதனை ஆரோக்கியமான உணவாக சரிவிகித சமமான உணவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் அதிகமாகும்.
- சாப்பிடும் பொழுது குழந்தையை மற்றவரிடம் கொடுத்துவிட்டு நிதானமாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.
- நொறுக்குத் தீனி போன்று எதையாவது சாப்பிடும் பட்சத்தில் அதுபற்றிய கவனத்தோடு இருங்கள். பச்சை குடை மிளகாய், ஆரஞ்சு , ஆப்பிள், வாழைப்பழம், நிலக்கடலை, முட்டை போன்றவை உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும். எப்போதும் நார்ச்சத்து அதிகமான உணவையே சாப்பிடுங்கள். பொறித்த உணவை மறுத்து விடுங்கள். இரும்பு சத்து, கால்சியம் மற்றும் புரத சத்து அதிகம் இருக்கும் உணவை சாப்பிடுங்கள்.
- இத்தருணத்தில் நீர் சத்து சீக்கிரம் குறைந்துவிடுவதால் அடிக்கடி பழ ரசம் அருந்த வேண்டும். நாளொன்றிற்கு 10-12 டம்ளர் நீர் பருகுவது மிகவும் அவசியமாகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சோடா வகை பானங்களை குடிக்கக் கூடாது.
- எடைக்குறைப்பில் உங்கள் கவனம் இருக்கும் என்றால் நீங்கள் சர்க்கரையை தவிர்ப்பதும் செயற்கை சர்க்கரையை தவிர்ப்பதும் நல்லது.