சமீபத்தில் வெளியான ஆய்வில் 87.9 சதவீதம் இந்தியர்கள் ஒற்றைத் தலைவலி தொல்லையால் பாதிக்கப்படுவதாகக் தெரிவித்திருக்கிறார்கள்.
அதற்கான காரணம் கோபம், எரிச்சல், வேலை பளு போன்ற காரணங்களால் 70 சதவீதத்தினரும், விரதம் இருப்பதால் 46.3 சதவீதத்தினரும், உடல் சோர்வு, தொடர் பயணங்கள், அலைச்சல் போன்றக் காரணங்களால் 52.5 சதவீததினரும், சரியான தூக்கமின்மையால் 44.4 சதவீதத்தினரும், மாதவிடாய் காரணத்தால் 12.8 சதவீதத்தினரும், பருவ மாற்றத்தால் 10.1 சதவீதத்தினரும் ஒற்றைத் தலைவலியால் தினமும் பாதிக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைவலியோடு ஒப்பிடும்போது இரட்டைத் தலைவலியால் 34.4 சதவீதத்தினர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.
மேலே குறிப்பிட்ட சில காரணங்கள் மட்டுமன்றி நம்முடைய வாழ்க்கை முறையும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் சில விஷயங்களைக் , கடைப்பிடிக்காமல் இருப்பது நல்லது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
மன அழுத்தம் வேண்டாம் : இந்தியர்களின் ஒற்றைத் தலைவலிக்கு மிகப் பெரும் காரணமாக மேலே குறிப்பிடுவதில் முதலில் இருப்பது மன அழுத்தம்தான் எனவே எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் அதை ஏதாவதொரு வகையில் வெளியேற்றிவிடுங்கள். ஆனால் அது ஆரோக்கியமான வழியாக இருக்க வேண்டும்.
உணவைத் தவிர்க்க வேண்டாம் : பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் உணவிற்குக் கூட முக்கியத்துவம் அளிப்பதில்லை. குறிப்பாக சத்தான உணவை உண்ணுங்கள். உணவைத் தவிர்ப்பதாலும் ஒற்றைத் தலைவலி வரும்.
ஹார்மோன் மாற்றம் : ஹார்மோன் சீரற்ற நிலைக்குக் காரணம் தூக்கமின்மை உணவை நேரத்திற்கு உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் ஏற்படும் எனவே இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்கவும்.
தண்ணீரைத் தவிர்க்க வேண்டாம் : உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தண்ணீர் அவசியம். எனவே அவ்வபோது தண்ணீர் பருகுவதை தவிர்க்காதீர்கள்
கடினமான உடற்பயிற்சி வேண்டாம் : யோகா, தியானம், நடை பயற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உடலுக்கு அதிக அழுத்தம் தருவதாலும் ஒற்றைத் தலைவலி வரும்.
தேவையற்ற அலைச்சல்களை தவிர்க்கவும் : அமர்ந்த இடத்திலிருந்தே ஒரு விஷயத்தை முடிக்க முடியுமென்றால் முடித்துவிடுங்கள். தேவையற்ற அலைச்சல், பயணங்கள் ஒற்றைத் தலைவலிக்கு முக்கிய காரணம்.