புதுடில்லி: ‘டிவி’ பெட்டி தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த, 5 சதவீத இறக்குமதி வரியை, மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., டிவிக்களின் விலை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
டிவி பெட்டிகள் தயாரிப்புக்கு தேவையான சில மூலப்பொருட்களை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருத்திய பின், உள் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், ‘ஓபன் செல் பேனல்’ எனப்படும் உதிரி பாகம், முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, டிவியின் விலையில், பாதி விலை கொண்டது.
இந்நிலையில், 15 இன்ச் அளவுக்கு மேற்பட்ட, எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., டிவிக்களுக்கான ‘ஓபன் செல் பேனல்’ உட்பட, டிவி தயாரிப்புக்கு பயன்படும் சில மூலப்பொருட்களின் இறக்குமதி வரியை, மத்திய நிதி அமைச்சகம், நேற்று ரத்து செய்தது. இதனால், எல்.இ.டி., மற்றும் எல்.சி.டி., ‘டிவி’க்களின் விலை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.