சசிகலாவின் விடுதலை கூடிய விரைவில் நிகழ்ந்தே விடும் போல! அதன் பிறகு தமிழக அரசியலில் அ.தி.மு.க.வை மையப்படுத்தி பெரும் அதிரடிகள் நடக்க இருக்கும் என்பதை இப்போதே சீனியர் அரசியல் விமர்சகர்கள் யூகிக்கிறார்கள். குறிப்பாக இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவருக்கும் சசியின் விடுதலை பெரும் தலைவலியாக இருக்கும் என்றும் கணிக்கிறார்கள்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சமீபத்தில் சந்திரலேகா சந்தித்தார். பா.ஜ.வின் முக்கியஸ்தர்களின் ஒருவரான சுப்ரமணியசாமியின் லாபியில் மிக முக்கிய நபரான சந்திரலேகா இப்படி அவரை சந்தித்தது மிக மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
சசிகலாவிடம் சந்திரலேகா வைத்த கோரிக்கைகளும், சில உத்தரவுகளும் முழுக்க முழுக்க அ.தி.மு.க.வை மையப்படுத்தியதுதான். ’நன்னடத்தை! எனும் தலைப்பின் கீழ் உங்களை விரைவில் ரிலீஸ் செய்துவிடுகிறோம். நீங்கள் உடனடியாக கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.’ என்றாராம் லேகா, அதற்கு சசியோ, ‘எந்த கட்சி?’ என்றிருக்கிறார். உடனே ‘அ.தி.மு.க.தான். அதிலென்ன சந்தேகம்?’ என்று பதில் வந்திருக்கிறது.
உடனே ‘எனக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான் சம்பந்தமில்லாமல் ஆக்கிவிட்டார்களே? அப்புறம் ஏன் நான் அந்த கட்சியை தலைமையேற்க வேண்டும்?’ என்று சசி மறுக்க, சந்திரலேகாமளமளவென சில திட்டங்களயும், உத்தரவுகளையும் சசிகலாவுக்கு இட்டிருக்கிறார் லேகா. அதைத்தொடர்ந்து சசியும் வழிக்கு வந்ததாக தெரிகிறது.
இதில் ஒரு முக்கியமான விஷயமென்ன என்றால், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரையும் வைத்து எதிர்வரும் தேர்தலில் அ.தி.மு.க.வை பிரதானப்படுத்திவிட முடியாது, இவர்களை விட சசிகலாவுக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது, எனவே அவரை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆக்கிவிடுவது! அவரைப் பிரதானப்படுத்தியே தேர்தலை சந்திப்பது! எனும் மூவ்களில்தான் பா.ஜ.க. இருக்கிறதாம்.
சசியை ஏற்றுக் கொண்டாலும் தினகரனை ஏற்றுக் கொள்ள பா.ஜ. தயாராக இல்லை. எனவே அவர் உள்ளே நுழைய கூடாது! என்று சொல்கிறதாம். ஆனால் இதற்கு சசி சம்மதிக்கவில்லை. ‘என் குடும்பத்தினரை நம்பாமல் துரோகிகளை நம்பி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது.’ என்றாராம்.
இந்த வாத, விவாதத்தின் முடிவில் ஜெயலலிதா போல் சசிகலா இருக்கலாம், ஜெ.,வுக்கு துணையாக சசி இருந்த இடத்தில் தினகரன் இருக்கலாம். ஆனால் கழக பதவி எதுவும் கிடையாது! எனும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் ஒரு வழியாக.
ஆக மொத்தத்தில் தாங்கள் டம்மியாக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதால் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும்.
ரெண்டு பேரும் சேர்ந்து அ.ம.மு.க.வை கையிலெடுக்காமல் இருந்தால் சரி! என்று சிரிக்கிறார்கள் விமர்சகர்கள்.