ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் முக்கிய அறிவுப்பு வெளியாகுமாம்..!

ஜனாதிபதித் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பேச்சு நடத்தி இன்னும் ஓரிரு தினங்களில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டியது அவசியமாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாகப் பல சுற்றுப் பேச்சுகளைக் கடந்த காலத்தில் நடத்தினோம். எனினும், இறுதித் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை .

பொதுஜன முன்னணியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. அவர்கள் மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிடவே விரும்புகின்றனர். சுதந்திரக் கட்சி 62 வருடங்கள் இந்த நாட்டுக்காகச் சேவை செய்த கட்சி. நாம் எமது கட்சியையோ சின்னத்தையோ விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் என்ற எமது கோரிக்கையை பொதுஜன முன்னணியினர் ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை. எமது ஆதரவின்றி எந்தக் கட்சியும் வெல்ல முடியாது.

இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து இழுத்தடிக்க நாம் விரும்பவில்லை இன்னும் ஓரிரு தினங்களில் அக்கட்சியினருடன் பேச்சு நடத்தி இறுதி முடிவை எடுப்போம். சுமுகமான முடிவு வராவிடின் மாற்று நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கும் நிலையிலே உள்ளோம்.

சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கான எந்த முடிவையும் எடுக்கவில்லை. பேச்சில் சுமுக முடிவு எட்டாத பட்சத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆராய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

நாம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகப் பல கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். மக்கள் விடுதலை முன்னணியினருடனும் கூடப் பேச்சு நடத்தி வருகின்றோம்” என தெரிவித்துள்ளார்.