பாலியல் புகார் கொடுக்க தொந்தரவு.! கல்லூரி மாணவர்கள் போராட்டம்.!

தமிழகதில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் அளிக்கக் கூறி மாணவியைத் தொந்தரவு  செய்ததாக அந்த கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வராக ஜார்ஜ் வில்லியம்ஸ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு எதிராக பாலியல் புகார் அளிக்க வேண்டும் என தனக்குப் பேராசிரியர் ஜோதி, விடுதி வார்டன் ஷெர்லி இருவரும் அழுத்தம் கொடுத்ததாக பெண்ணொருவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், நான் ஒய்எம்சிஏ கல்லூரியில் படிக்கிறேன். கல்லூரியில் நிறையபேர் தவறு செய்து கொண்டிருந்தனர். இதை தட்டிக் கேட்கப் போன முதல்வரை எப்படியாவது கல்லூரியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். எனவே நிறையப் புகார் கொடுத்தும் முதல்வரைக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்ப முடியவில்லை.

இதனால் மற்றொரு பெண்ணையும் என்னையும் முதல்வருக்கு எதிராக பாலியல் புகார் கொடுக்கச் சொல்லி பெண் பேராசிரியரும் வார்டனும் என்னை மிரட்டுகின்றனர். கடந்த ஒரு மாதமாக இந்த தொந்தரவு நடக்கிறது. இப்படியே விட்டுவிட்டால் என்னை போல் விடுதியில் உள்ள நிறைய பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனவே இதற்கு பின்வரும் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். கல்லூரி முதல்வர் இங்கே வர தயவு செய்து உதவி செய்யுங்கள் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வதில் அர்த்தமில்லை. வார்டனும், பேராசிரியரும் செய்வது ரொம்ப தவறு என்று அழுது கொண்டே பேசுகிறார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஆதரவாக ஒய்எம்சிஏ கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். கல்லூரி முதல்வரின் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் பேராசிரியரும், வார்டனும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இவ்விவகாரத்தில் காவல் துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.