சுவையான மணத்தக்காளி காரக் குழம்பு.!

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் வயிற்று புண் வாயில் ஏற்படும் குழிப்புண் ஆகியவை வருவது தடுக்கப்படும். குறிப்பாக இந்தக் கீரையில் உள்ள சிறிய தக்காளி உடல் உஷ்ணமாவதை தடுக்கும். அந்த மணத்தக்காளியில் கார குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரையில் உள்ள காய்கள் -50 கிராம் ( காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்)

சின்ன வெங்காயம் (சிறிதாக நறுகியது)- 10
பெருங்காயம் பவுடர் – 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 100 மில்லி
மிளகாய் பொடி – 4 ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
புளி – சிறிதளவு
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
வெல்லம் -1 ஸ்பூன்
அரிசி மாவு -2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – இரண்டு
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு

செய்யும் முறை:

பாத்திரத்தில் நல்லெண்ணெயைவிட்டு முதலில் பெருங்காயத் தூளை செர்ந்து பின் கடுகைப் போடவேண்டும். கடுகு வெடித்ததும் மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போட்டு பின்பு வெந்தயம், சீரகம், மணத்தக்காளிக் காயையோ அல்லது வற்றலையோ போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

அதன் பின்னர் புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி தாளித்த பொருட்களோடு ஊற்ற வேண்டும். அதனுடன் மிளகாய் பொடி, தேவைக்கான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வரும் போது சிறிது வெல்லத்தூளை கலந்து, அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஊற்ற வேண்டும்.

அது நன்கு கொதித்த பின்னர் கறிவேப்பிலையை கிள்ளி போட்டு  குழம்பு நல்ல பரிமாறும் பதத்திற்கு வந்தவுடன் இறக்க வேண்டும். இப்போது மணமணக்கும் மணத்தக்கஆளி குழம்பு ரெடி. இதை சூடான சாதத்தில் குழம்பு ஊற்றி நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இதனுடன் சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.