ஜிம்பாப்வே கிரிக்கெட் அணித்தலைவர் மசகட்சா, வெற்றியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். வங்கதேசத்தில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
சாட்டோகிராமில் நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 61 ஓட்டங்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் கிறிஸ் பொஃபு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி, 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித்தலைவர் ஹாமில்டன் மசகட்சா 42 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் விளாசினார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் தனது அதிரடி ஆட்டத்தினால், தனது கடைசி போட்டியில் அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியுடன் மசகட்சா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 36 வயதான அவர் போட்டி முடிந்ததும் கூறுகையில், ‘இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அத்துடன் பந்துவீச்சாளர் பந்துவீசிய விதமும் தான். தொடக்கம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.
அப்படி இருந்தால் வெற்றி நிச்சயம் என்று கருதினோம். அணித்தலைவராக இருந்து வெற்ற பெற வைத்தது மிகவும் சிறப்பான ஒன்று. அதுவும் எனது கடைசி போட்டியில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தது அருமையான தருணம்’ என தெரிவித்துள்ளார். மசகட்சா 209 ஒருநாள் போட்டிகளில் 5,658 ஓட்டங்களும், 38 டெஸ்ட் போட்டிகளில் 2,222 ஓட்டங்களும் எடுத்துள்ளார். அத்துடன் 65 டி20 போட்டிகளில் 1,600 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.