வரலாறு படைப்பாரா இந்தியாவின் அமித்!

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்  போட்டியில் ஆசியக் குத்துச்சண்டை சாம்பியனான இந்தியாவின் அமித் பங்கல் (52கிலோ பிரிவு) இறுதி போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் அவர் வெள்ளிப்பதக்கத்தினை உறுதி செய்துள்ளார். இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு வீரர் மனீஷ் கவுஷிக் (63கிலோ பிரிவு) அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

நேற்று அரை இறுதியில் கஜகஸ்தான் வீரர் சாகென் பிபோசினோவை 3-2 என்று வீழ்த்தி, இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பங்கல் நிகழ்த்தினார். இன்று ( இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு) அமித் பங்கல் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாகோபிதின் சோய்ரவ் என்பவரை இறுதியில் எதிர்கொள்கிறார்.

2018-ல் ஆசியப் போட்டிகளில் சாம்பியன் ஆன அமித், ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி போட்டிகளில் 49 கிலோ எடைப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால், இந்த ஆண்டு 52 கிலோ எடைப்பிரிவில் இணைந்தார்.  இந்த எடைப்பிரிவில் ஏற்கெனவே அவர் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் ஒரே தொடரில் இந்தியா இதுவரை ஒரேயொரு வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை இரண்டு பதக்கங்களுடன் வர உள்ளது. அதுவும் வெண்கலத்தினை தாண்டி தங்கம் வெள்ளி என பதக்க எதிர்பார்ப்பு உறுதியாகியுள்ளது.