இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியே மீண்டும் களம் இறங்கியுள்ளது.
இந்த ஆட்டத்தில் 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பெறப்போவது யார் என்று போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டிக்கு முன் ரோஹித் ஷர்மாவை விட கேப்டன் கோலி ஏழு ரன்கள் அதிகமாக இருந்த நிலையில் இந்த போட்டியில் ரோஹித் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்களை அடித்தார். அப்போது கோலியை விட 2 ரன்கள் அதிகம் பெற்று முதல் இடத்தை ரோஹித் பெற்றார். ஆனால் அடுத்து வந்த கோலியும் 9 ரன்களை எடுக்க மீண்டும் கோலி ஏழு ரன்கள் அதிகமாக பெற்று முதலிடத்தினை பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் ரோஹித் விளையாடியதன் மூலம் இந்திய அணிக்காக அதிக இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய வீரர் பட்டியலில் 98 போட்டிகளுடன் முதலிடத்தினை பிடித்திருந்த தோனியை ரோஹித் சமன் செய்துள்ளார்.