மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால்தான் நிச்சயம் முக்தி கிடைக்கும்.
புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு இருக்கும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் ஆகும்.
புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசி :
இந்த அற்புதமான புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘அஜா” ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பின், வறுமை நீங்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த நாளில் விரதமிருந்தால் இழந்த சொத்துக்கள் திரும்ப கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர்.
இந்த நாளில்தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே நாமும் இவ்விரத நாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக்கூடாது.
முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்..
இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்கவல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் செர்க்க லோகத்தை அடைவர்.