இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆண்கள் 20 ஓவர் போட்டி தொடர் நடந்து முடிவடைந்த நிலையில், தற்போது பெண்கள் 20 ஓவர் போட்டி தொடரானது தொடங்கியுள்ளது. இன்று சூரத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் சார்பில் ஷபாலி வர்மாவும், நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் களமிறங்கினார்கள். ஷபாலி வர்மா இந்தியா சார்பில் களம் இறங்கும் இளமையான கிரிக்கெட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 15 வயதில் சர்வதேச போட்டிகளில் இன்று அறிமுகமானார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மா முதல் ஓவர்லயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ஸ்மிரிதி மந்தனா பொருத்தவரையில் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஐம்பதாவது இருபது ஓவர் போட்டிகளில் அவர் விளையாடுகிறார். இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஆண்கள் அணி, பெண்கள் அணி இரண்டிலுமே ஒருவர் தொடர்ச்சியாக 50 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு பவுண்டரிகளை விளாசிய மந்தனா 21 ரன்களில் ஆட்டமிழக்க, ரோட்ரிக்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் 43 ரன்கள் விளாசினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் கிடைக்க இந்திய அணி பீதியில் உறைந்தது. இரண்டாவது ஓவர் இறுதியில் முதல் விக்கெட் கிடைக்க, அடுத்த ஓவரை வீச வந்த தீப்தி சர்மா மிகச் சிறப்பாக வீசி 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றினார். அதேபோல அதற்கு அடுத்து வந்த ஓவரில் பூனம் யாதவ் 2 அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்க அணி 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது.
அதனை அடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நின்ற டு ப்ரீஸ் மட்டும் நிலைத்து நிற்க இந்திய அணிக்கு கிளியை ஏற்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 59 ரன்கள் குவித்தார். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தீப்தி சர்மா 4 ஓவர்களை வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.