தமிழகத்தில் பெண் தோழியுடன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு மாயமானதாக கூறப்பட்ட பெண், பொலிஸில் ஆஜராகி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த வினிதா(20) என்ற பெண்ணுக்கும், சானாஊருணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோ(25) என்பவருக்கும், கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. டிக்-டாக்கில் வீடியோ செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட வினிதாவுக்கு, அந்த செயலியின் மூலம் திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் இருவரும் டிக்-டாக் செயலி மூலம் பாடல்களுக்கு ஏற்ப நடித்து, ஒருவருக்கொருவர் அனுப்பியும், செல்போனில் பேசியும் வந்துள்ளனர். இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் ஆரோக்கிய லியோ, மனைவின் டிக்-டாக் வீடியோக்களைப் பார்த்து அவரை கண்டித்துள்ளார். பின்னர் அபியின் படத்தை வினிதா தனது கையில் டாட்டூவாக வரைந்து கொண்டதை வீடியோ காலில் பார்த்த ஆரோக்கிய லியோ, ஊருக்கு வந்ததும் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வினிதாவை அவரது தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் தான், வினிதா நகைகள் மற்றும் பணத்துடன் டிக்-டாக் தோழியுடன் மாயமாகிவிட்டதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வினிதா மற்றும் அவரது தோழி அபியை பொலிஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையில் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட வினிதா, நேற்று மாலை திடீரென சிவகங்கை நகர பொலிஸில் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தினார். அப்போது திருவேகம்புத்தூரில் வினிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அங்கிருந்து வந்த பொலிஸார் அவரை அழைத்துச் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் வினிதா கூறுகையில்,
திருமணத்தின்போது எனக்கு வழங்கி நகைகளை அடகு வைத்துதான் எனது கணவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன், கடந்த 4 மாதமாக நட்பு முறையில் பழக்கம் ஏற்பட்டது. இது என் கணவருக்கு தெரியும். இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்த எனது கணவர் கடந்த 18ஆம் திகதி திடீரென ஊருக்கு வந்தார். என்னை சந்தேகப்பட்டு அடித்தார். இதனால் எனது காலில் காயம் ஏற்பட்டது.
நான் வீட்டை விட்டு வெளியேறி, கரூரில் உள்ள எனது மற்றொரு தோழியான சரண்யா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தேன். இந்நிலையில் தொலைக்காட்சியில், நான் டிக்-டாக் தோழியுடன் மாயமானதாக செய்திகள் வெளியானது. இதைப் பார்த்த நான் எனது தோழி சரண்யா வழங்கிய ஆலோசனையின் பேரில் தற்போது சிவகங்கை நகர பொலிஸில் ஆஜராகி நடந்த உண்மையை தெரிவித்தேன்.
நான் வீட்டில் இருந்து 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் பிரேஸ்லெட்டுடன் மட்டும்தான் சென்றேன். மற்றபடி எந்த நகையையும் எடுத்து செல்லவில்லை. தற்போது வெளியான தவறான செய்திகளால் எனது டிக்-டாக் தோழிக்கு பிரச்னை வரக்கூடாது என்றுதான், நான் பொலிஸில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.