சார்ஜர் போட்டபடி செல்போனை பயன்படுத்துபவரா நீங்கள்?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் தேவேந்திரன் வயது 27, பிரபல தனியார் நிறுவனத்தில் செல்போன் டவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மதியம் தேவேந்திரன் தனது வீட்டில் செல்போனை சார்ஜர் போட்டுக்கொண்டே, அதை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அந்தசமயத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து தூக்கி தூர வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் தேவேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.