இலங்கை – பாகிஸ்தான் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி பிற்போடப்பட்டது

10 வருடங்களின் பின்னர் கராச்சியில் சர்வதேச கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்கும் பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்றைய தினம் ஏமாற்றத்தில் முடிந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி மழை காரணமாக முடிவின்றிக் கைவிடப்பட்டது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெறவிருந்தது. இந்த மைதானத்தில் 10 வருடங்களின் பின்னர் நடத்தப்பட ஏற்பாடான முதல் போட்டி இதுவாகும். போட்டிக்கான இரண்டு அணிகளின் வீரர்களும் நேற்று பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அங்கு நடத்தப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இது அமைந்துள்ளது.

இரண்டு அணிகளின் வீரர்களுக்கும் உயர் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், கராச்சியில் இன்று பெய்த கடும் மழை காரணமாக போட்டியை நடத்த முடியவில்லை. நாணய சுழற்சியில் ஈடுபடக்கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதனால், போட்டியை முடிவின்றிக் கைவிட போட்டி மத்தியஸ்தர் தீர்மானித்தார்.

இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (29) நடைபெறவிருந்த போதிலும், அதனை எதிர்வரும் 30 ஆம் திகதி கராச்சியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.