ஏழை மக்களோடு மக்களாக செயற்படுகின்ற, அனைத்து மக்களையும் சரியாக பார்க்கின்ற சிறந்த வேட்பாளர் எமக்கு கிடைத்திருக்கின்றார். என மறைமுகமாக சஜித்தை ஆதரித்து இன்று காரைதீவில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உரையாற்றினார்.
காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலையின் 90வது அகவை இன்று காலை 10 மணியளவில் அதிபர் மணிமாறன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலைக்கு சேவையாற்றிய முன்னாள் பாடசாலை அதிபர்களின் சேவை நலன் பாராட்டும் மாகாண பாடசாலை மட்டத்தில் சாதனைகள் புரிந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், இந்த நாட்டிலேயே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும், அவரின் சேவை எப்படி இருக்க வேண்டும் அவர் எங்களது சிறுபான்மை சமூகத்திற்கு என்ன செய்கின்றார், என்ன செய்ய போகின்றார் என்ற கேள்விகள் எங்கள் மத்தியில் எழுப்புகின்ற ஒன்றாக இருக்கின்றது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பாகவும், சிறுபான்மை மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினையை மிக இலகுவாக கையாழ்பவராக இருக்க வேண்டும். அந்தவகையில் கடந்த காலங்களில் பல வேட்பாளர்கள் உருவாகி பலர் ஜனாதிபதியாகவும் வந்திருக்கிறார்கள்.
அவர்கள் வேட்பாளர்களாக வருகின்ற போது பல வாக்குறுதிகளை விஷேடமாக தமிழ் மக்களிடையே அள்ளி வீசுகின்றார்கள் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் காலம் கடந்து மரணித்து போகின்றன. அவ்வாறான வேட்பாளரை தெரிவு செய்யாமல் உண்மையான அர்த்தபுஷ்டியுள்ள வேட்பாளரை தெரிவு செய்யவேண்டிய கடப்பாடு உள்ளது. கடந்த காலங்களிலே எங்களுடைய மக்களை கொன்று புதைத்து இரத்தக்கறை படித்தவர்கள் வேட்பாளராக வந்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட வேட்பாளர்களை எமது சமூகம் ஆதரிப்பார்களாயின் மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்கு தள்ளப்படுவார்கள். இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக நிலத்துக்கு உள்ளே புதைக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் காரணமான நபர்கள் மீண்டும் ஆட்சி பீடம் ஏறும் யுகம் உருவாக்கூடாது.
ஏழை மக்களோடு மக்களாக செயற்படுகின்ற அனைத்து மக்களையும் சரியாக பார்க்கின்ற சிறந்த வேட்பாளர் எமக்கு கிடைத்திருக்கின்றார். அவரை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை அரசியல்வாதிகள் சொல்லி தெரிய வேண்டியதில்லை வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும் .
தமிழ் மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டி வேட்பாளரை வெற்றியடைய செய்வார்கள் என தெரிவித்தார் இந்த நிகழ்விற்கு ஆத்மீக அதிதியாக சிறிமத் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி பிரபு பிரேமானந்த ஜீ மஹராஜ், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், பழைய மாணவர்கள் சங்க தலைவர் வைத்தியர் ஜீவராணி சிவசுப்ரமணியம் , மாணவர்கள் , ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் பொதுமக்களும் கலந்துகொண்டார்.