க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள கேள்வி பதில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் நீதியரசராக இருந்தபோது நவராத்திரியின் போது பேட்டி எடுத்தேன். இப்பொழுது நீங்கள் அரசியல்வாதி. நாளை தொடக்கம் நவராத்திரி. நவராத்திரி பற்றி உங்கள் கருத்துக்களைக் கூறமுடியுமா?
போர்க்காலத்தின் போது பகவத்கீதை வெளிவந்தது போல் உள்ளது உங்கள் கேள்வி. அரசியலுக்குள் இருக்கும் என்னிடம் ஆன்மீகம் சம்பந்தமான கேள்வியை உள்நுழைக்கின்றீர்கள். நன்றி! சுமார் 35 ஆண்டு காலம் நவராத்திரியின் போது நான் முழுமையாக விரதமிருந்ததுண்டு. ஒன்பது நாட்களும் நீராகாரந் தவிர ஆகாரம் இன்றியே விரதம் இருந்தேன். அரசியலுக்கு வந்த பின்னர் விரதத்தை கைவிட்டுவிட்டேன். ஆனால் அன்னையைப் பற்றி நவராத்திரி காலத்தில் கேட்டதால் அதற்குப் பதில் அளிப்பதில் பெருமைப்படுகின்றேன்.
சிவராத்திரிக்கு ஒரு இரவு (மகா சிவராத்திரி). நவராத்திரிக்கு ஒன்பது இரவுகள். சிவராத்திரி அமாவாசைக்குரியது. நவராத்திரி அமாவாசைக்குப் பின்னர் வரும் ஒன்பது நாட்களுக்கும் உரியது. சிவராத்திரி பூஜ்ய இரவு. சைபரே (0) அதன் குறியீடு. நவராத்திரி ஒன்று தொடக்கம் ஒன்பது வரையிலான குறியீடுகளை உள்ளடக்கியுள்ளது. (1-9). பத்தாவது நாள் தசமி. ஒன்றும் சைபரும் சேர்ந்த நாள் தசமி (10). ஆடாமல் அசையாமல் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சிவன் (0) சகலதையும் ஆட்டிவிற்கும் அன்னை பராசக்தியுடன் (1-9) கூடும் நாள் விஜயதசமி. அதன் பின்வரும் எண்கள் யாவும் ‘0’ சேர்ந்து முன்செல்ல வைக்கும் எண்களே.
அவ்வெண்களுக்கு அதன் பின் வரையறை இல்லை. கட்டுப்பாடு இல்லை.
ஒன்பது நாட்கள் கடந்தால் வருவது தசமி. அதுவும் வெற்றித்தசமி (விஜய தசமி). மூன்று நாள் துர்க்கைக்கு. அவள் உடலைப் பரிபாலிப்பவள். அடுத்த மூன்று நாள் இலக்குமிக்கு. அவள் மனதைப் பரிபாலிப்பவள். அறிவைப் பரிபாலிப்பவள் வாணி. ஆகவே நவராத்திரி தரும் செய்தி என்னவென்றால் நாம் நமது உடல், உள்ளம், அறிவு ஆகியவற்றைக் கடந்தால் அனுபவிப்பது வெற்றியையே.
நாம் யார் என்று எமக்குத் தெரியாது. ஆனால் நாம் எமது உடலை உணர்கின்றோம். என் கை, என் கால், என் தலை என்கின்றோம். அவற்றை “நான்” கொண்டுள்ளதை உணர்கின்றோம். நாம் எமது மனதில் உள்ள உணர்வுகளையும் உணர்கின்றோம். “நான் கவலையாக இருக்கின்றேன்”, “நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்” என்று கூறும் போது நான் வேறு கவலை வேறு ஆகின்றது. நான் வேறு மகிழ்ச்சி வேறு ஆகின்றது.
அடுத்து நான் எனது அறிவை உணர்கின்றேன். “எனது கெட்டித்தனத்தைப் பார்த்தீர்களா? எல்லா வினாக்களுக்கும் சரியாக விடை அளித்துவிட்டேன்” என்கின்றேன். அதாவது நான் வேறு என் அறிவு வேறு என்றாகின்றது. உடல், உள்ளம், அறிவுக்கு அப்பாலே தான் “நான்” உள்ளேன்.
நான் வேறு அவை வேறு என்பதை நவராத்திரி விரதமிருந்து உணர்கின்றேன். அதாவது சாப்பாடு உள்ளே போகாமல் இருக்கும் போது எமது விழிப்புணர்வு கூர்மையடைகின்றது. நான் வேறு இந்த உடல், உள்ளம், உணர்வு, அறிவு யாவையும் வேறு என்று அப்போது உணர்கின்றேன். “நான்” உள்ளேன். ஆனால் எனது உடல், உள்ளம், அறிவு என்னைச் சிறைப்படுத்திக் கொண்டிருப்பதையும் உணர்கின்றேன். என்னால் அவற்றை விட்டுச் செல்ல முடியாமல் இருக்கின்றது. கட்டுப்பட்டுள்ளேன்.
உண்மையில் நாம் இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலகும் நாள் தான் விஜயதசமி.
அதனுடைய அர்த்தம் என்ன என்று கேட்பீர்கள். உடல் என்பது ஒரு வரையறை, உள்ளமும் அவ்வாறுதான். அறிவும் அப்படித்தான். நாம் இந்த உடலினுள் சிறைப்பட்டுள்ளோம். சிறையில் இருந்து வெளியே வந்தால் எமக்கு வரையறைகள் இருக்கமாட்டா. சிலர் கனவுகளின் போது வேண்டிய இடத்திற்குப் பறந்து செல்வது போல் உணர்வார்கள். உலகத்தில் நடப்பவற்றை மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது போல் உணர்வார்கள். அந்தவாறு நாம் எமது உடல்களை விட்டு, உணர்வுகளை விட்டு, அறிவுபாற் சிந்தனைகளை விட்டு வெளியே செல்ல முடியும். அவ்வாறு செல்வது தான் வெற்றியாக விஜயதசமி அறிவிக்கின்றது.
இந்து மதம் குறியீடுகளால் ஆனது. பண்டைய மக்கள் பலர் எழுத்தறிவில்லாதவர்கள். இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பக்கத்தில் படித்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் இருக்கின்றார்கள். வேறு ஒரு புறத்தில் படையினர், நிர்வாகத்தினர் போன்றோர் இருக்கின்றார்கள். மூன்றாம் அலகாக பெரியதும் சிறியதுமான வணிகப் பெருமக்கள் உள்ளார்கள். கடைசி அலகுதான் மேற்கண்டவர்களுக்காக வேலை செய்யும் பெரும் பகுதி மக்கள். ஆகவே பொதுவாக, படித்தவர்கள், ஆள்பவர்கள், வணிகர்கள், மற்றோர் என்ற நான்கு சமூக அலகுகள் இருப்பதை நாம் காணலாம். இந்தவாறு தான் பிராம்மணர் (படித்தோர்), சத்திரியர்கள் (ஆள்பவர்கள்), வைசியர் (வணிகர்), சூத்திரர் (மற்றோர்) என்ற நான்கு பிரிவுகள் ஆதி இந்து சமுதாயத்தில் காணப்பட்டன. இதிலே கூடிய மக்கள் சூத்திரர். அவர்களுக்கு அந்தக் காலத்தில் எழுதப்படிக்கத் தெரியாது. அந்த வசதி அவர்களுக்குச் செய்து கொடுக்கப்படவில்லை.
அவர்களுக்கு எவ்வாறு தத்துவஞானத்தைப் போதிப்பது என்ற பிரச்சினை ஞானிகளுக்கு எழுந்தது. அதனால்த்தான் இராமாயணம், மகா பாரதம் போன்ற காப்பியங்களை இயற்றினார்கள். நவராத்திரி போன்ற விரதங்களையும் பண்டிகைகளையும் அறிமுகம் செய்தார்கள். இவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஆழ்ந்த தத்துவக் கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. அவற்றை எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்குப் போதிக்கும் வகையில் தான் இந்தக் காப்பியங்களையும் பண்டிகைகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இவை ஊடாக காலக் கிரமத்தில் மக்கள் உண்மையைக் கண்டறிவார்கள் என்றே அவ்வாறு செய்தார்கள். உதாரணத்திற்கு இராவணன், விபீஷணன், கும்பகர்ணன் போன்றோர் உண்மையில் குறியீடுகள். இராவணன் இரஜச குணத்தின் குறியீடு. விபீஷணன் சாத்வீக குணத்தின் குறியீடு. கும்பகர்ணன் தாமச குணத்தின் குறியீடு.
ஆகவே நவராத்திரி என்ற கருத்துருவாக்கம் ஒரு குறியீடு. விரதம் இருந்து உடலை மென்மையாக்கி, உடல் பருமனைக் குறைத்து, உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எண்ணங்களையும் கட்டுப்படுத்தினால் தாமாகவே ஒரு விடுதலை உணர்ச்சி எமது மனங்களுக்கு ஏற்படும். அதுவே விஜயதசமி. ஆனால் நாம் அத்துடன் நின்று விடுகின்றோம். விஜய தசமியில் மீண்டும் உண்ணத் தொடங்கிவிடுகின்றோம். உடலின் மிருது நிலை பறி போகின்றது. அதற்கு அப்பாலுஞ் செல்பவன் தான் ஞானி. ஞானியர் எமக்குப் போதிக்கும் அருங்கருத்துக்கள் நவராத்திரியில் மறைந்து கிடக்கின்றன.