நடிகர் | சந்திரன் |
நடிகை | சாட்னா டைட்டஸ் |
இயக்குனர் | சுதர் |
இசை | அஷ்வத் |
ஓளிப்பதிவு | மார்ட்டின் ஜோ |
பார்த்திபன், கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் போட்டு ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்புள்ள ஓவியத்தை திருடுகிறார்கள். இவர்கள் கூட்டத்தை பிடிக்க ஐதராபாத் போலீஸ் தீவிர முயற்சி செய்கிறது.
இந்த ஐந்து பேரும் அடுத்ததாக சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் உலக கோப்பையை திருட திட்டம் போடுகிறார்கள். இதை திருடி விற்றால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால், இவர்களுக்கு பல தடைகள் வருகிறது.
இதை சமாளித்து இறுதியில் ஐந்து பேரும் உலகக் கோப்பையை திருடினார்களா? இல்லையா? ஐதராபாத் போலீஸ் இவர்களை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கயல் சந்திரமௌலி இப்படத்தின் மூலம் திரையில் தோன்றியிருக்கிறார். நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்திய இவருக்கு இந்த படமும் பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் காமெடி காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.
வித்தியாசமான கெட்டப்பில் தனக்கே உரிய நக்கல், நையாண்டியுடன் நடித்து அனைவருடைய கவனத்தையும் பெற்றியிருக்கிறார் பார்த்திபன். பல காட்சிகளை சாதாரணமாக நடித்து விட்டு செல்கிறார். பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்த சாட்னா டைட்டஸ் இந்த படத்தில் ஐவரில் ஒருவராக நடித்திருக்கிறார். ஆண்களுக்கு இணையாக போட்டிபோட்டு நடித்திருக்கிறார். சாம்ஸ், டேனி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
கொள்ளையடிப்பதை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுதர். கிரிக்கெட் உலக கோப்பையை திருட முயற்சிப்பது புதிய முயற்சி. திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாகவும் காமெடியுடனும் கொண்டு செல்கிறார் இயக்குனர். ஆனால், காமெடி காட்சிகளை சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
அஷ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ காமெடி கூட்டம்.